search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கிரிவலப்பாதை"

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுற்றி சென்ற பிரமாண்ட பெருமாள் சிலையை பார்க்க குவிந்த பொதுமக்கள் பக்தியில் பரவசமடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள அசுரக்கோட்டை கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பல்வேறு கிராமங்கள் வழியாக மக்களுக்கு அருள்பாலித்தவாறே லாரியில் சிலை பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள புறவழிச்சாலை சந்திப்பு அருகே வடஆண்டாப்பட்டு கிராம எல்லையில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது.

    நேற்று மீண்டும் லாரி சிலையுடன் தனது பயணத்தை தொடர்ந்தது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன.

    சிலை கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் உள்ள ரெயில்வே கேட் பெரியார் சிலை ஆகிய இடங்களில் சிக்கல் ஏற்படும் என்று போலீசார் கருதினர். இதனை தடுக்க அந்த இடங்களில் இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சென்டர் மீடியன் அகற்றப்பட்டது.

    ரெயில்வே கேட் அருகே வரும்போது சரக்கு ரெயிலுக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் சிறிது நேரம் சிலை அங்கேயே நின்றது. கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் சென்று சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. பின்னர் லாரி அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. பெரியார் சிலை அருகே எளிதாக லாரி திரும்பியது.

    அதைத்தொடர்ந்து மத்தளாங்குளத் தெரு வழியாக புறப்பட்ட லாரி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதி வழியாக கிரிவலப்பாதையில் வந்தது. அப்போது அங்கிருந்த சென்டர்மீடியன் இடையூறாக இருந்ததால் அவை 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிலையின் பின்னாலே ஊர்வலமாக வந்து வழிபட்டனர். பலர் காணிக்கைகளை செலுத்தினர். சிலர் பூக்கள், மாலைகள் வாங்கி சிலை மீது வீசினர். வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சிலையை தொட்டு வணங்கினர். பலர் வீடுகள், மாடிகளில் இருந்து பார்த்து வழிபட்டனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய போது சிலமீட்டர் தூரத்தில் லாரி சிக்கியது. மின்கம்பங்கள் இருந்ததாலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் லாரி உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் அருகில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் கழித்து மீண்டும் லாரி புறப்பட்டது. போளூர் சாலை வழியாக அண்ணா நுழைவுவாயில் அருகே வந்து கிரிவலப்பாதை திருநேர்அண்ணாமலை கோவிலை கடந்து சென்றது.

    நிருதிலிங்கம் கோவில் அருகே சென்றபோது ஒரு புளியமரம் இடையூறாக இருந்தது. இதையடுத்து மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்ற லாரி கிரிவலப்பாதை செங்கம் சாலை அருகே நிறுத்தப்பட்டது.

    கிரிவலப்பாதையில் சுமார் 10 கி.மீட்டர் தூரம் பெருமாள் சிலை பயணித்தது. சிலையை பார்க்க குவிந்த பொதுமக்கள் பக்தியில் பரவசமடைந்தனர். அந்தியந்தல், கோலாபாடி, கண்ணக்குருக்கை வழியாக செங்கம் செல்கிறது.


    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகளை நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபடுவர்.

    இந்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க கிரிவலப்பாதை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் இந்த பாதையை பசுமையாக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 62 மரங்கள் வாடியுள்ளதாக தெரியவந்தது. இவற்றில் 6 மரங்கள் தொடர்ந்து வளரச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நுழைவு வாயில் முதல் காஞ்சி சாலை அபய மண்டபம் வரை இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மரங்கள் நடுவதற்கான இடங்கள் தகுதியாக உள்ளதா, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். மேலும், தற்போது கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, அபயமண்டபம் அருகில் முற்றிலும் பட்டுப்போன மரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு உயிர் பெற்று மீண்டும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்துள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
    ×